33 வருடப் பணி அல்லது 58 வயதில் ஓய்வு..? ஓர் அலசல்
அரசு வேலையில் 33 வருடம் பணி நிறைவு செய்தவர்களுக்கு 58 வயதில் பணி ஓய்வு, மற்றவர்களுக்கு 60 வயதில் பணி ஓய்வு என்கிற செய்தி தமிழக அரசு ஊழியர்களிடையே நன்கு பதிவாகியுள்ளது. ஆனால், இது என்ன கணக்கு என்கிற கேள்விக்கான பதில் பலருக்கும் தெரிவதில்லை.
ஓய்வு தேதியில் மாற்றம் இருக்குமா?.
தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையில், ‘‘31.05.2020 அன்று யாரெல்லாம் ஓய்வு பெற இருந்தார்களோ, அவர்கள் அனைவரும் தமது 60 வயது வரை பணியில் இருப்பார்கள்’’ என்று இருப்பதால், மேல் நிலைப் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் 31.05.2022 அன்றுதான் ஓய்வு பெறுவார்களே தவிர, அதற்குமுன் ஓய்வு பெற மாட்டார்கள்.
மேற்கண்ட ஆணைப்படி, 01.06.1962 வரை பிறந்த தேதியைக் கொண்ட அனைவரும் 31.05.2022 அன்று பிற்பகல் ஓய்வு பெற்றுவிடுவார்கள். அதாவது, ஓர் ஊழியர் 20.05.1962 அன்று பிறந்ததாக அவரது பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர் தனது 60-வது வயதை 19.05.2022 அன்று நிறைவு செய்திருப்பார். எனவே, 19.05.2022 பிற்பகல் இவர் ஓய்வு பெற வேண்டும்.
ஆனால், ஓர் ஊழியர் ஓய்வு பெற வேண்டிய தேதி, மாதத்தின் நடுவில் வந்தால், அந்த ஊழியர் அந்த மாதத்தின் (அவர் பிறந்த மாதத்தின்) கடைசி தேதி வரை பணியில் நீடித்திருப்பார். இந்த விதியின்படி, 19.05.2022 அன்று ஓய்வு பெற வேண்டிய ஊழியர் 31.05.2022 அன்று பிற்பகல் ஓய்வு பெறுவார்.
மேற்கண்ட சலுகையானது மாதத்தின் 2-ம் தேதி முதல் மாதக் கடைசி தேதி வரை பிறந்தவர்களுக்கு மட்டும்தான். இதே ஊழியர், 01.06.1962 அன்று பிறந்தவர் எனில், இவர் 31.05.2022 அன்றே ஓய்வு பெற்றுவிடுவார்.அதாவது, மாதத்தின் முதல் தேதியில் பிறந்த வர்கள், தான் பிறந்த மாதத்துக்கு முந்தைய மாதத்தின் கடைசி தேதி அன்றே ஓய்வு பெறச் செய்வது வழக்கமான நடைமுறை ஆகும்.
31.05.2022-க்குப் பிறகு...
தற்போது நடைமுறையில் உள்ள அரசாணையில் 60 வயதானவர் ஓய்வு பெற நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தேதி 31.05.2022. இந்த அடிப்படை தேதியின்படி கணக்கிட்டால், பிறந்த தேதி 02.06.1962 முதல் 01.07.1962 வரை இருக்கும் எனில், அவர்கள் அனைவரும் 30.06.2022-ல் ஓய்வு பெறுவார்கள். இதேபோல, 02.07.1962 முதல் 01.08.1962 வரை பிறந்தவர்கள் 31.07.2022-ல் ஓய்வு பெறுவார்கள். அதாவது, தனது 60-வது வயதில் ஓய்வு பெறத் தொடங்குவார்கள்.
58 வயதில்...
33 வருடம் பணி செய்தவர்களுக்கு 58 வயதில் ஓய்வு எனில், 02.06.1964 முதல் 01.07.1964 வரை பிறந்தவர்கள், 30.06.2022-ல் ஓய்வு பெற வேண்டியிருக்கும். இதேபோல, 02.07.1964 முதல் 01.08.1964 வரை பிறந்தவர்கள் 31.07.2022 அன்று ஓய்வு பெற வேண்டியிருக்கும்.
தற்காலிகப் பணிக்காலம்...
தமிழக அரசுத் துறைகளில் ஏதோ ஒன்றில், ஏதோ ஒரு பதவியில் முறையான பணி கிடைக்கும் முன்பு, தமிழக அரசுத் துறையிலோ, உள்ளாட்சியிலோ தற்காலிகமாகப் பணி அமர்வு கிடைத்து சிலர் சில காலம் பணியாற்றி இருக்கக்கூடும். அதன் பிறகு, தற்போது உள்ள முறையான பணிக்கு நியமனம் செய்யப் பட்டிருக்கக்கூடும். இந்தத் தற்காலிகப் பணியையும் சேர்ந்துதான் 33 வருடப் பணி கணக்கிடப்படுமா எனச் சில ஊழியர்கள் கேட்கின்றனர். அதாவது, ஒருவர் தனது 25-வது வயதில் சேர்ந்து பஞ்சாயத்து யூனியன் மருந்தகத்தில் மருத்துவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு, தமிழ்நாடு மருத்துவத் துறையில் முறையான நியமனம் பெற்று, ஒரு மருத்துவராக 29 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ளார். நான்கு வருட தற்காலிகப் பணி + தற்போதைய முறையான பணி இரண்டும் சேர்ந்து 33 வருடப் பணி என்றாகிறது. இவருக்கான ஓய்வுக் காலம் எப்படிக் கணக்கிடப்படும்?
முறையான பணியில் எந்தத் தேதியில் பணி வரண் (Regularization) செய்யப்பட்டதோ, அந்தத் தேதியிலிருந்து தான் 33 வருட ஓய்வுக்கான பணிக்காலம் கணக்கிடப்படும்.அந்த அடிப்படையில் இந்த ஊழியரின் தற்போதைய வயது 58-தான் என்பதால், இவர் 60 வயது வரை பணியில் தொடர முடியும். ஆனால், இவர் 33 ஆண்டுகள் பணி செய்தவர் என்ற அடிப்படையில் தற்காலிகப் பணிக்காலம் கணக்கில் சேராதே தவிர, ஓய்வூதியப் பலன்களுக்கு இவரது தற்காலிகப் பணி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
எப்படி எனில், மேற்கண்ட ஊழியர் 29 ஆண்டு முறை யான பணி முடித்துள்ளார். இவருக்கு தற்போது வயது 58-தான். என்றாலும், முறையான பணியில் 33 ஆண்டுகள் நிறைவு பெறாத காரணத்தால், இவர் 31.05.2022 அன்று ஓய்வு பெற மாட்டார். மேலும், இரண்டு ஆண்டுகள் பணியில் இருப்பார். அப்போது இவரது முறையான பணி 31 ஆண்டாக உயரும். இதனுடன் இவர் செய்துள்ள தற்காலிகப் பணிக்காலம் நான்கு ஆண்டுகளும் சேர்க்கப் பட்டால், மொத்த பணிக்காலம் 35 ஆண்டுகளாக இருக்கும். மொத்த பணிக்காலத்தில் தகுதியற்ற பணிக்காலம் இருப்பின், அவை கழித்துவரும் நிகர பணிக்காலத்துக்கு ஓய்வுக்கால பணப்பலன் கணக்கிடப்படும்.
பதவி மாறுதல்
முறையான பணிக்காலத்துடன் தற்காலிகப் பணிக் காலத்தையும் சேர்த்து மொத்த பணிக்காலத்தை அதிகரிப்பதன் மூலம் ஓய்வூதியப் பணப்பலன் அதிகரிக்கும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், முறையான பதவியும், தற்காலிகப் பதவியும் ஒரே வகைப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது.
உதாரணமாக, தற்காலிக இளநில உதவியாளராக இருந்து விட்டு பணியிலிருந்து விடுவிக்கப் பட்டவர் தற்போது முறையான பதவியில் பட்டதாரி ஆசிரியராக இருந்தால், இளநிலை உதவியாளர் பணிக்காலத்தையும் ஆசிரிய பணிக்காலத்துடன் இணைத்துக்கொள்ளலாம். இதேபோல, முன்னதாக மருந்தாளுநராகத் தற்காலிக பணியாற்றியவர், தற்போது இளநிலை உதவியாளராக முறையான பணியில் இருந்தால், இவ்விரண்டு பணிக்காலமும் ஓய்வூதியப் பலனுக்குப் பயன் படுபவையே.
துறை மாறுதல்
துறை மாறுதலில் தற்காலிகப் பணி செய்திருந்தாலும் அத்தகைய தற்காலிகப் பணிக் காலம் ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதாவது, மத்திய அரசின் தற்காலிகப் பணி என்றாலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்காலிகமாகப் பணி புரிந்திருந் தாலும், அந்தப் பணிக்காலத்தையும் எடுத்துக்கொண்டு தற்போது ஓய்வூதியப் பணப்பலன் பெறலாம்.
பணிப் பதிவேடு
மேற்கண்ட தற்காலிகப் பணி பற்றிய பதிவு பணிப் பதிவேட்டில் இதுவரை பதியப்படாமல் விடுபட்டிருந்தால், உரிய பணிச்சான்றைப் பெற்று வந்து தற்போது பணிப்பதிவேட்டில் பதிவு செய்யலாம். ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் பெருமதிப்பு உடையனவாக இருக்கும் என்பதால், இதில் கவனம் அவசியம்.
33 வருடக் கணக்கு..?
அரசுப் பணியினருக்கு, அவர்கள் நிறைவு செய்த ஒவ்வோர் ஆண்டுப் பணிக்கும், ஊழியரது அரை மாதச் சம்பளம் பணிக் கொடையாக வழங்கப்படுகிறது. அதிகபட்ச பணிக்கொடை 16.5 மாதத்துக்கு மட்டுமே. ஒருவர் 40 ஆண்டு பணி செய்திருந்தாலும் பணிக்கொடை என்பது 33 வருடத்துக்கு மட்டுமே கணக்கிடப்படும். அதாவது, 33x1/2=16.5 இந்த விதியின்படி, ஓர் ஊழியர் அதிகபட்ச பணிக் கொடையாக 16.5 மாத சம்பளத்தைப் பெறட்டும் என்பதற்காகத்தான் இந்த 33 வருடக் கணக்கு. 60 வயதாகி, ஓய்வு பெற்றாலும், அவரது பணிக்காலம் எவ்வளவோ அதற்குத் தகுந்தாற்போல ஒவ்வோர் ஆண்டுக்கும் அரை மாதச் சம்பளம் பணிக்கொடை யாகக் கணக்கிடப்படும். இதற்கான தற்போதைய பணவரம்பு ரூ.20 லட்சம்.
Pension Commutation வரி உண்டா?
பென்ஷன் Commutation பற்றிய கேள்விகளும் உண்டு. தற்போது 30,000 ரூபாய் பென்ஷனுடன் ஓய்வு பெறுபவர் 10,000 ரூபாயை கம்யூடேசன் செய்யலாம். இதற்கான மொத்தத் தொகையாக ரூ.9,83,280 பெறலாம். தொகை பெற்ற நாள் முதல் ரூ.30,000 என இருந்த அடிப்படை பென்ஷன் ரூ.20,000-ஆகக் குறைந்துவிடும். என்றாலும், அகவிலைப்படியானது அடிப்படை பென்ஷனான 30,000 ரூபாய்க்கே கிடைக்கும். மேலும், கம்யூட் செய்த 10,000 ரூபாய்க்கு வருமான வரி கிடையாது. மாதாந்தர பென்ஷன் ரூ.20,000 + அகவிலைப் படிக்குத்தான் வருமான வரி கணக்கீடு செய்யப்படும்.
ஓய்வுக்கால பணப்பலன்
31.05.2022 அன்று நிகர பணிக்காலம் 33 ஆண்டு எனில், மேற்கண்ட Commutation Amount ரூ.12,96,900 பணிக்கொடை(Gratuity), ரூ.8,64,620 விடுப்பு சம்பளம்(Balance as on Retirement date : Earned Leave 240 Days(Max) 8 Months + UEL on Private affairs Max 180 Days , Encashment Days 90 ) என மொத்தம் ரூ.31,44,780 அதிகபட்சமாகக் கிடைக்கும். இத்துடன் 11 மாத வீட்டு வாடகைப்படியைச் சேர்த்துக் கொள்ளவும். இது 60,000 ரூபாய் அடிப்படை ஊதியத்துக்கான கணக்கீடு.
ஓய்வூதியத்துக்கு..
முழு ஓய்வூதியம் என்பது ஊழியரின் கடைசி அடிப்படை சம்பளத்தில் 50%. இவ்வாறு சரிபாதி சம்பளத்தை ஓய்வூதியமாகப் பெற 30 வருடப் பணி நிறைவே போதுமானது. எனவே, ஓர் ஊழியர் முழு ஓய்வூதியம் மற்றும் முழு பணிக்கொடை பெறுவதுதான் முழுமையான ‘ஓய்வுக்கால பணப்பலன்.’ எனவேதான், இந்த 33 வருடக் கணக்கு.
ஐந்து வகையான ஓய்வு
ஓர் அரசு ஊழியர் ஓய்வு பெறுவதில் ஐந்து வகை உண்டு. வயது முதிர்வில் ஓய்வு, விருப்ப ஓய்வு, இயலாமை காரணமான ஓய்வு, ஈடு செய் ஓய்வூதியத்துக் கான ஓய்வு மற்றும் கட்டாய ஓய்வு என்பவைதான் அந்த ஐந்து வகை. இவற்றில் மாதக் கடைசியில் ஓய்வு பெற அனுமதி என்பது, வயது முதிர்வு ஓய்வுக்கு மட்டுமே. கட்டாய ஓய்வு எனில், என்றைக்கு ஆணை வருகிறதோ, அன்றே ஓய்வு பெறுவது கட்டாயம். விருப்ப ஓய்வுக்கான மூன்று மாத முன்னறிவிப்பு காலம் என்றைக்கு முடிவடைகிறதோ, அன்றே விருப்ப ஓய்வு கிடைத்துவிடும். இதே போல, ‘உடல் தகுதியற்றவர்’ என மருத்துவக் குழு என்றைக்கு சான்று தருகிறதோ, அதைத் தொடர்ந்து ஓய்வு பெற வேண்டும்.
0 கருத்துகள்