தற்போது அனைத்து விதமான மத்திய, மாநில அரசுகளின் சலுகையை பெற ஆதார் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆனால் இந்த ஆதார் அட்டையில் பல பிழைகள் காணப்படுகிறது. அதே போல, சில விவரங்களும் விடுபட வாய்ப்புள்ளது அல்லது நீங்கள் வேறு முகவரிக்கு மாறும் போது, புதிய முகவரியை மாற்றம் செய்வதும் அவசியமானது. ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள அல்லது விவரங்களை சேர்க்க ஏற்கனவே UIDAI (Unique Identification Authority of India) சேவைகளை அளித்து வருகிறது.
இப்போது, ஆதார் அட்டை அப்டேட் சேவைகளை மேலும் சுலபமாக்க, நீங்களே சுய-சேவை புதுப்பிப்பு போர்ட்டல் வழியாக விவரங்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். உங்கள் ஆதார் அட்டையில் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், முகவரி மாற்றம், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கு நீங்கள் ஆதார் சேவை மையங்களை அணுகலாம். அல்லது சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டல் பயன்படுத்தி, நீங்கள் பின்வரும் விவரங்களை திருத்தி அமைக்கலாம் அல்லது மாற்றங்கள் செய்யலாம்.
இதற்கு நீங்கள் கணிசமான தொகையை செலுத்த வேண்டும். இந்த நிலையில் UIDAI மிகக்குறைந்த கட்டணத்தில் நீங்களே புதுப்பிப்பு போர்ட்டலில், பெயர் முதல் முகவரி வரை மாற்றிக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி உங்கள் பெயர், முகவரி, பாலினம், மொழி மற்றும் பிறந்த தேதி குறித்த விவரங்களை மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு அப்டேட்டுக்கும் நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விவரங்களை மாற்றினாலும், அது ஒரே அப்டேட்டாக மட்டுமே கருதப்படும். எனவே, நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று விவரங்களை மாற்றினால் அல்லது திருத்தியமைத்தால், ரூ.50 மட்டும் செலுத்தினால் போதுமானது.
ஆதாரில் உங்கள் விவரங்களை மாற்ற தேவையான ஆவணங்கள் பின்வருமாறு.
* நீங்கள் மாற்ற விரும்பும் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ஒவ்வொரு விதமான ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பெயரை மாற்றவோ அல்லது பெயரில் உள்ள எழுத்துப் பிழையை திருத்தியமைக்கவோ, உங்கள் அடையாள அட்டைகளில் (Proof of Identity) ஏதேனும் ஒன்றை நீங்கள் தெளிவாக ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். வாகன ஓட்டுனர் உரிமம், பான் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
* உங்களுடைய பிறந்த தேதியை மாற்ற அல்லது பிழையை திருத்தம் செய்ய விரும்பினால், உங்கள் பிறப்பு தேதியை உறுதிபடுத்தும் ஆவணம் ஒன்றை நீங்கள் ஸ்கேன் செய்து சமர்ப்பிக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், பள்ளியில் அல்லது கல்லூரியில் வழங்கப்பட்ட டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
* உங்கள் பாலினம் ஆதார் அட்டையில் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அல்லது பாலினத்தை மாற்ற விரும்பினால், அதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வழியே அங்கீகரிக்க வேண்டும். அல்லது, கேமரா வழியே உங்கள் முகம் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும்.
* ஆதார் அட்டையில் பலருக்கும் அவ்வபோது முகவரி மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்படும். நீங்கள் முகவரியை புதுப்பிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ, முகவரியை உறுதி செய்யும் ஆவணங்களில் ஒன்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ரேஷன் அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை ஸ்கேன் செய்து சமர்ப்பிக்கலாம்.
ஆதார் அட்டையில் உங்கள் மொழியை எந்தவிதமான ஆவணமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்ததை விட நல்ல வட்டி.. கடன் வசதியும் உண்டு! சேமிப்பு கணக்கை இந்த வங்கியில் தொடங்குங்கள்!
ஆதார் சுயசேவை போர்ட்டலை பயன்படுத்தி, உங்கள் விவரங்களை திருத்த விரும்பினால், https://ssup.uidai.gov.in/ssup/ இணைப்பைக் கிளிக் செய்யவும். ஆதார் அட்டையில் எந்த மாற்றங்களை நீங்கள் மேற்கொள்ள விரும்பினாலும், உங்களின் பதிவு செய்ய மொபைல் எண் அவசியம். ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP வழியே நீங்கள் அங்கீகாரம் செய்ய வேண்டும். மேற்கூறிய விவரங்கள் தவிர்த்து, உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை மாற்ற விரும்பினால், நீங்கள் ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும்.
0 கருத்துகள்