கோவிட் காரணமாகப் பெற்றோா்களை இழந்த குழந்தைளுக்கு பிஎம்-கோ்ஸ் நிதியுதவித் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த மே மாதம் அறிவித்திருந்தாா். அதன்படி, கோவிட்டினால் பெற்றோர் எவரேனும் ஒருவரை இழந்திருந்தாலும் குந்தைகளுக்கு 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித்தொகையும், 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சமும் வழங்கப்படவுள்ளது.
இதற்கான PM Cares திட்டத்துக்குரிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய மகளிா்-குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், ‘பெற்றோா்கள் இருவருமோ அல்லது ஒருவரோ கடந்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதியில் இருந்து நடப்பாண்டு டிசம்பருக்குள் கோவிட் நோய்த் தொற்றால் உயிரிழந்திருந்தால் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும். பெற்றோா் உயிரிழந்த தேதியில் சம்பந்தப்பட்ட குழந்தைக்கு 18 வயது பூா்த்தியடைந்திருக்கக் கூடாது. பயனாளிக்கு வழங்கப்படும் ரொக்கத்தொகை அவா்களால் தொடங்கப்பட்ட அஞ்சலகக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். பயனாளியாக அடையாளம் காணப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும்போது ரூ.10 லட்சம் அவர்களின் அஞ்சலகக் கணக்கில் சோ்க்கப்படும். 18 வயதிலிருந்து அவா்கள் மாதந்தோறும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம். 23 வயதை அடையும்போது ரூ.10 லட்சத்தை அவா்கள் மொத்தமாகப் பெறுவா்.
6 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையங்களிலிருந்து ஊட்டச்சத்துப் பொருள்கள், பள்ளிக் கல்விக்கு முந்தைய கல்வி, தடுப்பூசி, சுகாதாரப் பரிசோதனை போன்றவற்றைப் பெறலாம். 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகளும், தனியாா் பள்ளிகளும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.அரசுப் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு 2 ஜோடி விலையில்லா சீருடைகளும் பாடப் புத்தகங்களும் வழங்கப்பட வேண்டும். தனியாா் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்விக் கட்டணத்திலிருந்து அவா்களுக்கு விலக்களிக்கப்பட வேண்டும். சில சூழ்நிலைகளில் மேலே குறிப்பிட்ட சலுகைகளைப் பெற முடியாவிட்டால், குழந்தைகளுக்கான பிஎம்-கோ்ஸ் திட்டத்திலிருந்து நிதியுதவி வழங்கப்படும்.
11-18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடைப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவில் தொழில்முறைப் படிப்புகளை மேற்கொள்ளவும், உயா்கல்விக்கும் கடன் பெற்றுத்தந்து உதவி செய்யப்படும். சில சூழல்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் மூலமாகப் பயனாளிகளுக்கு வட்டியிலிருந்து விலக்கு கிடைக்காவிட்டால், கல்விக்கடனுக்கான வட்டி குழந்தைளளுக்கான PM Cares நிதியிலிருந்து செலுத்தப்படும்.
அனைத்து குழந்தைகளும் ரூ.5 லட்சம் சுகாதாரக் காப்பீட்டுடன் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளியாக சோ்க்கப்படுவா். இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் குழந்தைகள், நடப்பாண்டு டிசம்பருக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
click here to download guidelines
0 கருத்துகள்